கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-05-22 05:28 GMT
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இது குரூப்-ஏ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி பணியாகும். ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் (ஆண்-பெண்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்....

வயது வரம்பு:

ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1-7-1994 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட், மற்றும் கமர்சியல்பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1994 மற்றும் 30-6-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://www.joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளம் வழியாக 1-6-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்