தேவேகவுடாவுடன் சாமனூர் சிவசங்கரப்பா திடீர் சந்திப்பு துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தால் ஏற்பேன் என பேட்டி

தேவேகவுடாவுடன் சாமனூர் சிவசங்கரப்பா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தால் ஏற்பேன் என அவர் தெரிவித்தார்.

Update: 2018-05-24 22:00 GMT

பெங்களூரு, 

தேவேகவுடாவுடன் சாமனூர் சிவசங்கரப்பா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தால் ஏற்பேன் என அவர் தெரிவித்தார்.

தேவேகவுடாவுடன் திடீர் சந்திப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக பரமேஸ்வரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். ஆனால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்–மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த பதவிக்கு லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சாமனூர் சிவசங்கரப்பா, எம்.பி.பட்டீல், எஸ்.ஆர்.பட்டீல் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடாவின் வீட்டிற்கு நேற்று மதியம் சாமனூர் சிவசங்கரப்பா திடீரென்று சென்றார். அங்கு தேவேகவுடாவை சந்தித்து அவர் பேசினார். அப்போது துணை முதல்–மந்திரி பதவி தனக்கு வழங்க ஆதரவு அளிக்கும்படி தேவேகவுடாவிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அரை மணிநேரத்திற்கும் மேலாக அவருடன் பேசிவிட்டு சாமனூர் சிவசங்கரப்பா வெளியே வந்தார். பின்னர் சாமனூர் சிவசங்கரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

பதவிகொடுத்தால்...

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்திருப்பது தொடர்பாக தேவேகவுடாவை சந்தித்து பேசினேன். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. தேவேகவுடாவும், நானும் ஏற்கனவே நண்பர்கள் தான். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 16 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகி உள்ளனர். 16 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

லிங்காயத் சமூகத்திற்கு துணை முதல்–மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆனால் துணை முதல்–மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்