விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் முதல்மந்திரி வலியுறுத்தல்

விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Update: 2018-05-24 22:30 GMT

மும்பை, 

விலை உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்வதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி நாளுக்குநாள் சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் சிறிது நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்தன. இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள்...

இதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதனை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனால் மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்படும் என கூறி மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து கருத்து கூறிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பெட்ரோலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் தமிழகத்தின் வருமானம் பாதிக்கப்படும் என கூறினார்.

ஆனால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.

விலை குறையும்

இது குறித்து அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால், தற்போது இருப்பதுபோல் வரி மேல் வரி விதிக்கப்படுவது தடுக்கப்பட்டு ஒற்றை வரியின் மூலம் பெட்ரோல் விலை தானாக குறையும்.

இதனால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மராட்டியம் ஏற்கனவே இந்த திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் உள்ளன. இது தொடர்பாக அனைத்து மாநில நிதி மந்திரிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்