சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை யானை மிதித்து கொன்றது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை மிதித்து யானை கொன்றது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2018-05-26 00:15 GMT
சமயபுரம்,

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் 10 வயதுடைய மசினி என்ற பெண் யானை உள்ளது. கோவிலில் பூஜை மற்றும் விழாக்காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது. மேலும் தினமும் கோவிலில் யானை நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

அதன்பின் கோவில் அருகே சற்று தொலைவில் மாகாளிகுடியில் உஜ்னி அம்மன் கோவில் அருகே ஒரு இடத்தில் யானை அடைக்கப்படும். கோவில் யானைக்கு பாகனாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 50) இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல மாகாளிகுடியில் இருந்து யானை குளிப்பாட்டி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. மேலும் கோவிலுக்கு குருக்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை நிறுத்தப்பட்டிருந்தது. பூஜை முடிந்த பின் கோவிலில் பலகார ஸ்டால் அருகே யானை நின்றது.

அதன் அருகே பாகன் கஜேந்திரன் நின்று கொண்டிருந்தார். உதவி பாகனான அவரது மகன் அச்சுதன் (22) சற்று தள்ளி நின்றார். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். மேலும் கோவிலின் வெளியே மண்டபங் களில் 5 திருமணங்கள் நடந்தன. மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்திருந்தனர்.

யானை மசினி பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தது. அப்போது யானையின் நடவடிக்கை மாறியது. இதனால் பாகன் யானையை அங்குசத்தால் தட்டி கொண்டிருந்தார். காலை 10.35 மணி அளவில் யானை திடீரென கோபம் கொண்டு பிளிறியது. மேலும் அருகில் இருந்த பாகன் கஜேந்திரனை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு காலால் பயங்கரமாக மிதித்தது. இதனை கண்ட பக்தர்கள் அலறி அடித்து கோவிலை விட்டு உடனே வெளியே ஓடத்தொடங்கினர். மேற்குபுற வாசல் வழியாக பக்தர்கள் வெளியே ஓடி வந்தனர். சிதறி ஓடியதில் கீழே விழுந்து 8 பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.

யானை பாகனை விடாமல் காலால் சுற்றி, சுற்றி மிதித்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இருப்பினும் கோபத்தில் யானை தொடர்ந்து பாகனை காலால் மிதித்து அங்குமிங்கும் ஓடியது. இதில் அவரது உடல் சிதறியது. பாகன் இறந்த பின் அவரது உடலை யானை சுற்றி, சுற்றி வந்தது. அந்த இடத்தின் அருகேயே நின்றது. பக்தர்கள் அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்து விட்டனர். மேலும் குருக்களும் வெளியே வந்தனர். ஒரு சில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்த போது பாகனின் மகன் அச்சுதன் கோவிலில் நின்றிருந்தார். தனது கண்முன்னே தந்தையை யானை மிதித்து கொன்றதை கண்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோவிலில் நான்கு புறமும் உள்ள நுழைவு வாயில் கதவுகள், சன்னதி நடைகள் சாத்தப்பட்டன.

யானையின் கோபத்தை தணிக்க மற்றொரு யானையை அழைத்து வர போலீசார் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அப்போது உடனடியாக உள்ளூரில் இருந்து ஜெயா என்ற யானை கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டது. அந்த யானையை உள்ளே கொண்டு சென்றால் ஏதேனும் விபரீதம் ஏற்படும் என அதிகாரிகள் கருதினர்.

இதனால் அந்த முயற்சியை கைவிட்டு ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில் யானை பாகன்கள், உதவி பாகன்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். மேலும் யானையை கட்டிப்போட இரும்பு சங்கிலிகள், கயிறுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

யானைக்கு தர்ப்பூசணி பழங்கள், கரும்புகளை தூக்கி வீசினர். ஆனால் யானை அதனை சாப்பிடவில்லை. இதையடுத்து பாகன்கள் யானை பாசையில் பேசி சாந்தப்படுத்த முயன்றனர். அப்போது யானை சாந்தமாகி சற்று தள்ளி நகர்ந்த போது பின்பக்கமாக சென்ற பாகன்கள் மற்றும் உதவி பாகன்கள், ஊழியர்கள் உடனடியாக இரும்பு சங்கிலியை வீசி யானையின் கால்பகுதியை கட்டினர்.

மேலும் 4 கால்களிலும் இரும்பு சங்கிலியை சுற்றி தூண்களில் கட்டி வைத்தனர். பகல் 12.15 மணி அளவில் யானை சாந்தமாகியது. அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கொடுத்தனர். அதன்பின் யானை முழுவதுமாக சாந்தமாகியது.

இருப்பினும் யானையை உடனே வெளியே அழைத்து வராமல் கோவில் உள்ளேயே நிறுத்தியிருந்தனர். 6 மணி நேரம் கழித்து யானையை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வழக்கான இடத்தில் யானை கட்டி வைக்கப்பட்டது. கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நடைதிறக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்