தற்கொலை செய்த மாணவனின் தந்தை உருக்கம்; குடிக்க மாட்டேன் என்றும் சபதம்

எனது குடிப்பழக்கம் என்னுடையை மகனின் உயிரையே பறித்து விட்டது. எனவே வாழ்நாள் முழுவதும் இனி குடிக்க மாட்டேன் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை உருக்கமாக சபதம் ஏற்றுள்ளார்.

Update: 2018-05-26 23:45 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த அருமைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவருடைய மனைவி பேபி (34). இவர்களுடைய மகன் ஹரிகரன் (14). அனுப்பர்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் ஹரிகரன் வீட்டில் இருந்துள்ளான். பிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருக்கும் அவருடைய மனைவி பேபிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தைக்கும், தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் ஹரிகரன் கடுமையான மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

இதனால் பாதி நேரம் பக்கத்து தெருவில் உள்ள அவனுடைய பாட்டி வீட்டிலேயே இரவு நேரத்தில் ஹரிகரன் தங்கி வந்துள்ளான். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாட்டி வீட்டில் இருந்த ஹரிகரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஹரிகரன் இறந்த செய்தி கேட்டு உறவினர்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்து செல்கின்றனர். ஆனால் ஹரிகரனின் தந்தை பிரகாஷ் அவன் மறைவுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக மிகவும் சோகமாகவே இருந்து வருகிறார்.

மேலும் திடீரென அவர் வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களை ரோட்டில் வீசி எறிந்ததுடன் கதறி அழுதுள்ளார். மேலும் அவர் உறவினர்களிடம், குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று என்னுடைய மனைவி, மகன் மற்றும் மகள் உள்பட குடும்பத்தினரே கூறி வந்தனர். ஆனால் என்னால் குடிப்பதை விடமுடியவில்லை. நான் குடித்து விட்டு வருவதை விரும்பாத என்னுடைய மகன் ஹரிகரன் மனதுக்குள்ளேயே அந்த வேதனையை அடக்கி வைத்துள்ளான்.

ஆனால் இந்த ஒரு முடிவை எடுப்பான் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. எனது குடிப்பழக்கம் என்னுடைய மகனின் உயிரையே பறித்துவிட்டது. எனவே இனி மது குடிப்பதை நிறுத்தி விடுகிறேன். மேலும் எனது வாழ்நாள் முழுவதும் மது குடிக்கவே மாட்டேன் என்றும் சபதம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்