முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-05-29 22:30 GMT
கூடலூர்

தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 26-ந் தேதி அணையின் நீர்மட்டம் 113.50 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 294 கன அடியாகவும் இருந்தது.

தற்போது கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 114.80 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,213 கனஅடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையில் 1,694 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் நேற்றைய நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 37.04 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 83 கனஅடியாகவும் இருந்தது. அணையில் 732 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டர்):-

முல்லைப்பெரியாறு அணை-73, தேக்கடி-38.2, கூடலூர்-15.3, சண்முகாநதி அணை-11, உத்தமபாளையம்-13.4, வீரபாண்டி-5, சோத்துப்பாறை-3.

மேலும் செய்திகள்