கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-05-29 23:58 GMT
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.224 வழங்க வேண்டும், கிராமசபை கூட்டம் நடத்தி வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகளை தேர்வு செய்ய வேண்டும், ஊதியம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை நீக்க வேண்டும், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை தேர்வு செய்ய வேண்டும், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், ஏற்கனவே அரசு வழங்கி வந்த உதவித்தொகைகளை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாத்தையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தங்கமணி, நிர்வாகிகள் ஆறுமுகம், சுந்தர்ராசு, மாதவன், ராமச்சந்திரன், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்