புகையிலை நமக்கு பகையிலை

நாளை (மே31-ந் தேதி) புகையிலை எதிர்ப்பு தினம்.

Update: 2018-05-30 05:22 GMT
லகில் புகைபிடிப்பதாலும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஆண்டுக்கு 35 லட்சம்பேர் மரணத்தை தழுவுகின்றனர். மனித இறப்புகளை தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இதை தவிர்ப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ந்தேதியை புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்து விழிப்புணர்வு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. புகையிலையினால் ஏற்படும் தீமைகளை 1950-ம் ஆண்டுகளிலிருந்தே மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்து கூறி வருகின்றனர். ஆனாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே தான் உலக சுகாதார நிறுவனம் புகையிலை எதிர்ப்பு தினத்தை அறிவித்தது. நாம்தான் புகைபிடிப்பதில்லையே நமக்கென்ன என நினைக்கலாம். ஆனால் புகைக்காமல் புகைக்கிறோம். எப்படி தெரியுமா? புகைபிடிப்பவர்களின் புகையில் மூன்றில் ஒருபங்கு காற்றில் கலந்து அதை சிறியவர் முதல் பெரியவர் வரை சுவாசிக்கும்போது புகை நம்மையும் சேர்த்தே பாதிக்கிறது. இந்த அபாயநிலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே” என்ற வரிகளின்படி எல்லோரும் பிறக்கும்போது நல்லவர்கள் தான் ஆனால் வளரும் போதுதான் இதுபோன்ற புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். புகை பிடித்தலுக்கான காரணத்தை சிலர் மகிழ்ச்சிக்காக என்றும், சிலர் மனஅழுத்தத்திற்காக எனவும் பலரும் பல காரணங்களை கூறினாலும் புகை நமக்கு பகையே.

தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளில் வயதுவந்தவருக்கு மட்டுமே கடைகளில் சிகரெட் விற்கப்படுகிறது. அதற்கான கடுமையான சட்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஓரளவு சட்டம் இருந்தாலும் வியாபாரிகள் வருமானத்தை தான் பார்க்கிறார்கள். வருமானம்கூட நியாயமான வருமானமாக இருக்க வேண்டும் என உணரவேண்டும்.

வரலாற்றில் தென்அமெரிக்கா வில்தான் புகையிலை கண்டறியப்பட்டு அமெரிக்காவில் பரலானது. பின்னர் ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கு பரவியது. உலகளவில் தற்போதய நிலையில் புகைப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எப்போதாவது புகைத்தால்கூட புகையானது தன் பகையை மறக்காது அதாவது “சைலன்ட் கில்லர்”. முன்பைவிட இந்தியாவில் ஓரளவு விழிப்புணர்வு அடைந்துள்ளது எனலாம். பெற்றோர்கள் குழந்தைகளிடம் புகையிலை பொருட்களை வாங்கிவர சொல்வது குழந்தைகள் முன்பு புகைப்பது இவற்றை தவிர்த்தாலே வரும் தலைமுறை ஆரோக்கியமாகும். புகைத்தால்தான் புத்துணர்ச்சி என்பது வெறும் பேச்சு. நூலகம் செல்வது, பக்தியில் ஈடுபடுவது, தியானம் போன்ற நற்பண்புகளால் புத்துணர்ச்சியுடன் செயல்படலாம். புகையிலை இல்லை என்ற சொல்லே நாட்டிற்கு ஆரோக்கியம், நாட்டின் வளம், வளர்ச்சி. 

தொளசம்பட்டி குமார் மாணிக்கம்,
நூலகர்.

மேலும் செய்திகள்