தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

Update: 2018-05-30 22:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 22–ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 105 பேர் காயம் அடைந்தனர். இதில் பலர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு காலை 10–52 மணிக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக ரஜினிகாந்தை வரவேற்றனர். அப்போது திறந்த காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே திரளான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனால் அவர் மீண்டும் திறந்த காரில் எழுந்து நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரி வரை திறந்த காரில் நின்றபடியே வந்தார்.

நலம் விசாரித்தார்

காலை 11–27 மணிக்கு அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தார். அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்றார். அங்கு இருந்தவர்கள் கைதட்டி, உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்தவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு பழங்கள், ஹார்லிக்ஸ், போர்வை, பிஸ்கட் உள்ளிட்டவை அடங்கிய பையை வழங்கினார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார். அதே நேரத்தில் அந்த வார்டில் மக்கள் நெருக்கடி அதிகரித்தது. இதனால் அங்கிருந்து 11–50 மணி அளவில் புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்தை பார்ப்பதற்காக நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் டாக்டர்கள், நர்சுகளும் ஆர்வமாக வந்தனர். அவர்கள் திரண்டு நின்று உற்சாக குரல் எழுப்பினர். அவர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்தியபடியே ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

கண்ணீர் மல்க..

பின்னர் காயம் அடைந்தவர்கள் கூறும் போது, நடிகர் ரஜினிகாந்த் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. அதே நேரத்தில் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால், அவர் பாதிக்கப்பட்டவர்களுடன் அதிக நேரம் இருந்து பேச முடியவில்லை.

மேலும் சிலர் நாங்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினோம். அப்போது ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் என்று கூறினர்.

மேலும் செய்திகள்