மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.250 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சுமார் 2 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.250 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2018-05-30 23:00 GMT
நாமக்கல்,

வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன. இந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. எனவே வங்கிகளுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. இதனால் வங்கிகளில் வழக்கமாக நடைபெறும் காசோலை மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த போராட்டம் குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 300 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 50 தனியார் வங்கிகள் என மொத்தம் 350 வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மூடப்பட்டு உள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களின் போராட்டம் காரணமாக வங்கிகளில் சுமார் ரூ.250 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். மையங்களை பொறுத்த வரையில் ஏற்கனவே பணம் நிரப்பப்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக இன்று (நேற்று) பணம் நிரப்பப்படவில்லை. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் நாளையும் (இன்றும்) தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்