வெள்ளகோவிலில் பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவன் தற்கொலை

வெள்ளகோவிலில் பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2018-06-01 23:15 GMT
வெள்ளகோவில்,

வெள்ளகோவிலில் பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில் அண்ணா நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் நிதீஷ்குமார் (வயது 14). இவன் பாப்பம்பாளையத்தில் உள்ள கொங்கு மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட முழு ஆண்டு தேர்வில் நிதீஷ்குமார் தேர்ச்சி பெற்று விட்டான். இதை தொடர்ந்து அவன் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு செல்ல வேண்டும். விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி (நேற்று) பள்ளி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நிதீஷ்குமாரின் பெற்றோர், அவனுக்கு புதிதாக சீருடை, புத்தகம் போன்றவற்றை வாங்கி கொடுத்திருந்தனர். நேற்றுகாலை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ‘நான் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன்’ என்று தனது தந்தையிடம் நிதீஷ்குமார் கூறியுள்ளான்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ‘எஸ்.எஸ்.எல்.சி. வரையாவது படித்து முடித்தால் தான், உனது எதிர்காலம் கொஞ்சமாவது நன்றாக இருக்கும். என்னைப்போல் நீயும் கஷ்டப்படக்கூடாது. எனவே நீ பள்ளிக்கு செல்‘ என்று தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். அப்போது, வேண்டா வெறுப்பாக அவன் ‘சரி‘ என்று தலையாட்டி விட்டு, வழக்கம் போல், வீட்டில் டி.வி. பார்க்க தொடங்கியுள்ளான்.

பின்னர் அவனுடைய பெற்றோர் வீட்டின் வெளிப்பகுதியில் அமர்ந்து அக்கம் பக்கத்தினருடன் பேசிக்கொண்டிருந்தனர். இரவு 10 மணியளவில் அவர்கள் தூங்குவதற்காக புறப்பட்டனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும், நிதீஷ்குமார் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், வீட்டின் மேற்கூரையில் ஏறி ஓட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் விட்டத்தில் நிதீஷ்குமார் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்கி, நிதீஷ்குமாரின் உடலை தூக்கில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது அவனுடைய உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பள்ளி செல்ல விருப்பம் இல்லாமல் நிதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, நிதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்