உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திருப்புத்தொகையை பெறலாம் - மாநில வரி இணை ஆணையர் தகவல்

வரி செலுத்துனர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திருப்புத்தொகையை பெறலாம் என மாநில வரி இணை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-06-02 22:30 GMT
நெல்லை,

வரி செலுத்துனர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திருப்புத்தொகை பெறலாம் என்று நெல்லை கோட்ட மாநில வரி இணை ஆணையர் சுசீல்குமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகவரித்துறை ஆணையர் அறிவுரைப்படி, கடந்த 31-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை ‘திருப்புத்தொகை அரைத்திங்கள்‘ ஆக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி வரை வரி செலுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அனைத்து திருப்புத்தொகை விண்ணப்பத்துக்கும் திருப்புத்தொகை வழங்க அனைத்து மாநில வரிவிதிப்பு சரகங்களிலும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இதுவரை ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு, சேவை வரி இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.ரீ௴.ரீஷீஸ்.வீஸீ) திருப்புத்தொகை கோரி விண்ணப்பித்துள்ள மாநில வரித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வரி செலுத்துனர்கள் உடனடியாக அனைத்து ஆவணங்களையும் உரிய மாநில வரிவிதிப்பு சரகத்தில் தாக்கல் செய்து திருப்புத்தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உரிய ஆவணங்களை வரிவிதிப்பு அலுவலர்களிடம் சமர்ப்பிக்காத வரி செலுத்துனவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இதுதொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்காக, அனைத்து வரிவிதிப்பு சரகங்கள், துணை ஆணையர் அலுவலகங்களில் திருப்புத்தொகை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரி செலுத்துபவர்கள், கணக்கர்கள், பட்டய கணக்கர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 0462-2574348 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எனவே நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து வரி செலுத்துனர்களும் இணையதளத்தில் தாக்கல் செய்துள்ள திருப்புத்தொகை விண்ணப்பத்தின் நகலை உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய மாநில வரிவிதிப்பு சரகத்தில் தாக்கல் செய்து திருப்புத்தொகையை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்