தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை முடிந்தது அதிகாரிகள் டெல்லி சென்றனர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. அதிகாரிகள் டெல்லி சென்றனர்.

Update: 2018-06-07 20:45 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. அதிகாரிகள் டெல்லி சென்றனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் வந்தனர்.

அவர்கள் பல்வேறு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த 5–ந் தேதி புபுல் தத்தா பிரசாத், தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் மதுரையில் வைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

150 பேரிடம் விசாரணை

அதன்பிறகு மற்ற 4 உறுப்பினர்களும் சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர். 5 நாட்களாக நடந்த விசாரணை நேற்று முடிவடைந்தது. இதில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சுமார் 70 பேரிடமும், போலீஸ் துறையை சேர்ந்த 80 பேர் உள்பட 150 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர். இந்த வாக்குமூலம் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து மனிதஉரிமை ஆணைய உறுப்பினர்கள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு நேற்று காலையில் மதுரைக்கு சென்றனர். அங்கு இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்