கோகுல்ராஜ் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமீன் ரத்து நாமக்கல் கோர்ட்டு உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து, நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2018-06-07 23:15 GMT
நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், கார் டிரைவர் அருண் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜோதிமணி அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்த 14 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் நோட்டீசு அனுப்பி இருந்தார்.

இதையடுத்து இவர்களில் அமுதரசு என்பவரை தவிர மீதமுள்ள 13 பேரும் நேற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது செல்வராஜ் தவிர 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அமுதரசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களை போலீசார் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யுவராஜ் நீதிபதியை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால் நீதிமன்றத்தை அவர் அவமதித்ததாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட 14 பேரின் ஜாமீன் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் எங்களது (சி.பி.சி.ஐ.டி. போலீசார்) தரப்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டமிட்டே வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும், விசாரணைக்கு ஆஜராவதில்லை எனவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் எங்கள் தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் தான் 12 பேரின் ஜாமீனையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த வழக்கில் செல்வராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்று இருப்பதால் அவரின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை என கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்