அவசர பயணம் பற்றிய பேச்சால் வேதனை அடைந்தேன் கர்நாடகத்தில் ஆட்சி எந்திரம் நின்றுபோய்விட்டது குமாரசாமிக்கு, எடியூரப்பா கடிதம்

என்னுடைய அவசர பயணம் பற்றிய பேச்சால் நான் வேதனை அடைந்தேன் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி எந்திரம் நின்றுபோய்விட்டது என்றும் எடியூரப்பா கூறினார்.

Update: 2018-06-07 22:30 GMT

பெங்களூரு,

என்னுடைய அவசர பயணம் பற்றிய பேச்சால் நான் வேதனை அடைந்தேன் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி எந்திரம் நின்றுபோய்விட்டது என்றும் எடியூரப்பா கூறினார்.

முதல்–மந்திரி குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறி இருப்பதாவது:–

மனவேதனை அடைந்தேன்

பாகல்கோட்டை மாவட்டம் இலகல் என்ற ஊரில் மடாதிபதி சிவயோகி கடந்த மே மாதம் 21–ந் தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் ஹெலிகாப்டரை பயன்படுத்தினேன். அதைத்தொடர்ந்து தாவணகெரேயில் தற்கொலை செய்து செய்து கொண்ட ஒரு விவசாயியின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன். இந்த பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளர் லட்சுமி நாராயணா செய்தார்.

இந்த பயணம் பற்றி தலைமை செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாங்கள்(குமாரசாமி) இந்த அவசர பயணம் பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசி இருப்பதை கண்டு நான் மனவேதனை அடைந்தேன். ஒரு பொறுப்பான பதவியில் இருந்த நான், மடாதிபதி மற்றும் ஒரு விவசாயியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில் நான் ஹெலிகாப்டர் பயன்படுத்தியதை வீண் செலவு என்று தாங்கள் கூறி இருக்கிறீர்கள். இது சரியா?.

மக்களை திசை திருப்பும் செயல்

எனது இந்த பயண செலவை நானே ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் முதல்–மந்திரி பதவியில் அமர்ந்து, மக்களை திசை திருப்பும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பது சரியல்ல. அன்று நான் பொறுப்பு முதல்–மந்திரியாக இருந்தேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த அவசர பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அதனால் அரசு வழங்கிய வசதியை ஏற்றுக்கொண்டேன்.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மடாதிபதிகள் மீது மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனேயே சிரிகிரி மடாதிபதியை மரியாதை குறைவாக பேசி இருக்கிறீர்கள். தாங்கள் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மந்திரிகளை நியமிப்பதில் நடந்து வரும் குழப்பங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். பதவி சண்டை மற்றும் குழப்பங்களுடனேயே இந்த கூட்டணி ஆட்சியின் நாட்கள் நகர்ந்து வருகின்றன.

அரசியல் அர்ப்பணிப்பு

கர்நாடகத்தில் ஆட்சி எந்திரம் முழுவதுமாக நின்றுபோய்விட்டது. மக்களின் குறைகளை கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மடாதிபதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றதை வீண் செலவு என்று தாங்கள் ஆணவத்துடன் கூறி இருக்கிறீர்கள். இதுபோன்ற கருத்துகள் கூறுவதை நிறுத்துங்கள்.

இதுபோல் தரம் தாழ்ந்து பேசுவதால் கர்நாடகத்தின் பொருளாதார நிலை மேம்பட்டுவிடாது. இதற்கு அரசியல் அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்து, மக்கள் நலனை வெளிக்காட்டுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்