மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையாவிடம் கண்ணீர் விட்டு அழுத எம்.பி.பட்டீல்

மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையாவிடம் கண்ணீர் விட்டு எம்.பி.பட்டீல் அழுதார்.

Update: 2018-06-07 22:15 GMT
பெங்களூரு, 

மந்திரி பதவி கிடைக்காததால் சித்தராமையாவிடம் கண்ணீர் விட்டு எம்.பி.பட்டீல் அழுதார்.

25 புதிய மந்திரிகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் கடந்த மாதம்(மே) 23-ந் தேதி பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 25 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

இதில் காங்கிரசை சேர்ந்த 15 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 பேரும் அடங்குவர். காங்கிரசில் முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அதாவது எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், எஸ்.ஆர்.பட்டீல், ரோஷன் பெய்க், ராமலிங்கரெட்டி உள்ளிட்ட பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. குறிப்பாக எம்.பி.பட்டீல் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மேலிடத்திடம் வற்புறுத்தினார். கடைசியில் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை.

கண்ணீர் விட்டு அழுதார்

இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். கட்சி மேலிடம் மீது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் தனது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் எம்.பி.பட்டீல் சந்தித்து பேசினார்.

அப்போது தான் கட்சிக்காகவும், தனது சமூகத்திற்காகவும் பாடுபட்டதாகவும், எனக்கு மந்திரி பதவி தராமல் கட்சி புறக்கணித்துவிட்டதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு சித்தராமையா ஆறுதல் கூறி தேற்றினார். மேலும் பொறுமையாக இருக்கும்படி அவரிடம், சித்தராமையா கேட்டு கொண்டார். இந்த நிலையில் எம்.பி.பட்டீலின் ஆதரவாளர்கள் சித்தராமையா வீட்டின் முன்பு சிறிது நேரம் போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்