பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

மும்பையில் நேற்று பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

Update: 2018-06-07 23:00 GMT
மும்பை, 

மும்பையில் நேற்று பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

பருவமழை

மும்பையில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 நாட்கள் இரவு நேரத்தில் மும்பை, தானே, நவிமும்பை நகரங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. கொளுத்திய கோடை வெயிலுக்கு இதமாக பெய்த இந்த மழையால் மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மும்பையில் மழைக்கான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தீவிரமடைந்து பலத்த மழையாக கொட்டியது.

சாலைகளில் ெவள்ளம்

அதிகாலையில் பெய்த இந்த மழை காலை 7 மணி வரையிலும் நீடித்தது. அதன்பின்னர் சிறிது நேர இடைவெளியில் மீண்டும் வானில் கருமேகங்கள் திரண்டு மழை விட்டுவிட்டு மதியம் வரையிலும் பெய்து கொண்டே இருந்தது.

தாதரில் அதிகாலையில் இருந்து 5 செ.மீட்டரும், தாராவி பகுதியில் 2 செ.மீ., கிழக்கு புறநகரில் 1.5 செ.மீ., மேற்கு புறநகர் பகுதியில் 2.5 செ.மீ. மழையும் பதிவானது.

தானே, நவிமும்பை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்தது.

கனமழையின் காரணமாக நகரின் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. எல்பின்ஸ்டன்ரோடு, பரேல், தாதர் டி.டி. சர்க்கிள், இந்துமாதா, கிங்சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியது.

போக்குவரத்து பாதிப்பு

அந்த சாலைகளில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மழைநீர் தேங்கியதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங் குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், மழைநீர் தேங்கிய சாலைகளில் மோட்டார் பம்புகளை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டன. மும்பையின் போக்குவரத்து உயிர் நாடியான மின்சார ரெயில்கள் மழை காரணமாக தாமதமாக இயக்கப்பட்டன.

இந்தநிலையில், மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்