சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சீமைக்கருவேல மரங்கள்

காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-07 23:23 GMT
காரைக்குடி,

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கானாடுகாத்தான், மானகிரி, தேவகோட்டை ரஸ்தா, காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதன் ஒரு பகுதியாக திருமயம் முதல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா வரை இந்த சாலை பணி முழுமையாக முடிவடைந்தது. ஆனால் தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து தேவிப்பட்டினம் வரை ஏற்கனவே இருந்த சாலையை பைபாஸ் சாலையாக மாற்றுவதற்கு தற்போது அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த சாலையோரத்தில் இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். தற்போது இந்த பைபாஸ் சாலையின் இருபுறமும் எந்தவித மரமும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சாலையில் 1,500 மரக்கன்று நடுவதற்கு இலக்காக நிர்ணயித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை இதுவரை தொடங்கவில்லை.

இந்தநிலையில் தற்போது தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து மானகிரி, காரைக்குடி வழியாக திருமயம் வரை செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் இந்த சாலையோரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சிலர் சாலையோரத்தில் உள்ள மரங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். அதுவும் இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சாலையோரத்தில் உள்ள இந்த மரங்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ராமேசுவரம்-திருச்சி சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்