கிழக்கு கடலில் மீன்பிடி தடை காலம் 14-ந் தேதியுடன் நிறைவு

கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் சின்னமுட்டம் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-06-08 22:00 GMT
கன்னியாகுமரி,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தினை பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் 2 மாதங்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்து வருகின்றன. இவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தற்போது மீன்பிடி தடைக்காலத்தையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அத்துடன், தங்களது படகுகளை கரையோரம் ஒதுக்கி நிறுத்தி வைத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு கடற்கரை பகுதியில் தடைகாலம் வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். குறிப்பாக படகுகளை பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், வலைகளை சரிசெய்தல் என மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்