தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியுள்ளார்.

Update: 2018-06-08 20:45 GMT

கோவில்பட்டி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியுள்ளார்.

பூமி பூஜை

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி பள்ளியில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு, டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளார். அதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி, உதவி தலைமை ஆசிரியர் ராஜாராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், நகர குழு உறுப்பினர் சக்திவேல் முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, அபிராமி முருகன், பேராசிரியர் ராஜமாணிக்கம், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தமிழரசன், முன்னாள் மாணவர்கள் அய்யலுசாமி, கோபால்சாமி, நடராஜன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜாமணி, ஆசிரியர் ராஜா சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பேட்டி

நிகழ்ச்சியின் முடிவில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

பா.ஜ.க. அரசு, அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென் மண்டலம் சார்பில் பிரசார பயணம் நடக்கிறது. மத்திய அரசு காவரி வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பா.ஜ.க அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது. அதற்கு அ.தி.மு.க. அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் வாயு குழாய் பதிப்பு உள்ளிட்டவைகளால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழடைந்துள்ளது. தமிழகத்தில் ரே‌ஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மாதம் முழுவதும் கடைகள் திறக்கப்படுவதில்லை. 4 நாட்களில் தான் பொருட்களை வழங்குகிறார்கள். இதனை பார்க்கும்போது, ரே‌ஷன் கடைகளை மொத்தமாக பூட்டும் முயற்சியாகத்தான் நினைக்கிறேன்.

நிரந்தரமாக மூட வேண்டும்

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாட்கள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் பயன் அடைந்தனர். தற்போது 10 நாட்கள் தான் வேலை வழங்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டது. இனி திறக்க முடியாது என தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கு முன்னர் இப்படித்தான், கோர்ட்டு உத்தரவை பெற்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. எனவே காற்றில் வி‌ஷம் கலந்துள்ளதா, தண்ணீரில் வி‌ஷம் கலந்துள்ளதா? என தமிழக அரசு முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். பின்னர் சட்டரீதியாக நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழத்தில் 19 லட்சம் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு பென்சன் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் தனியார் கல்வி நிறுவனங்களும் ஏகப்பட்ட விளம்பரங்களை கொடுத்து மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு தமிழக அரசும் ஆதரவு கொடுப்பதால், அரசு தொடக்கப்பள்ளிகளை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் 3 பேர் பலியானார்கள். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை. பழைய முறையில் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்