மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில் காலத்தை விரயமாக்கும் அரசு ஈசுவரப்பா குற்றச்சாட்டு

மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில்தான் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் அமைந்துள்ள மாநில அரசு காலத்தை விரயமாக்குகிறது என்று ஈசுவரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2018-06-08 22:00 GMT

சிவமொக்கா,

மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில்தான் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் அமைந்துள்ள மாநில அரசு காலத்தை விரயமாக்குகிறது என்று ஈசுவரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.

மக்களுக்கு எதுவும் செய்யவில்லை

கர்நாடக மேல்–சபை பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், சிவமொக்கா டவுன் நவிலே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த பட்டதாரி தொகுதிக்கான வாக்குச்சாவடியில் சிவமொக்கா நகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 104 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. ஆனால் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த கூட்டணி அரசு இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

கூட்டணி ஆட்சி கவிழும்

இரு கட்சிகளிலும், மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமரசம் செய்வதில்தான் மாநில அரசு காலத்தை விரயமாக்கி வருகிறது. இவர்களின் சண்டைகளை டி.வி.யில் பார்த்து மக்கள் முகம் சுளிக்கிறார்கள். எந்த பயனும் அற்ற இந்த கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும்.

காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) ஆகிய இரு கட்சியிலும், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள வீரசைவ, லிங்காயத், குருபா என அனைத்து சமூக எம்.எல்.ஏ.க்களையும் சமாதானம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். காங்கிரசில் 4 அணிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் 2 அணிகளும் உள்ளன. மந்திரிகள் யாரும் மாநிலத்தை ஆட்சி செய்யவில்லை. அதிகாரிகள் தான் ஆட்சி செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்