கைது செய்யப்பட்ட காதலனை விடுவிக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

கைது செய்யப்பட்ட காதலனை விடுவிக்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் கண்ணாடி பாட்டிலால் கையை கீறிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

Update: 2018-06-08 23:01 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருமழிசை உடையார் கோவிலை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன் எபினேசராஜன்(வயது 25). இவரும் 18 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். வெள்ளவேடு போலீசார் எபினேசராஜனை நேற்று முன்தினம் ஒரு வழக்கு விசாரணைக்காக கைது செய்தனர்.

நேற்று அவரை திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர். இதை அறிந்த எபினேசராஜனின் காதலியான அந்த இளம்பெண் திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டு வளாகத்தின் முதல் மாடிக்கு சென்ற அவர் கைது செய்யப்பட்ட எபினேசராஜனை விடுவிக்கக்கோரி கோஷமிட்டார்.

காதலி தற்கொலை முயற்சி

மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி கதறி அழுதார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை பிடித்து சமாதானம் செய்தனர்.

அந்தவேளையில் அந்த பெண் அங்கு இருந்த கண்ணாடி பாட்டிலால் தனது இடது கையில் 7 இடங்களில் கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கையில் ரத்தம் கொட்டியது.

மருத்துவமனையில் சிகிச்சை

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் கையில் 6 தையல்கள் போடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்