ஊட்டியில் 2–வது நாளாக பலத்த காற்றுடன் மழை: மரங்கள் முறிந்து விழுந்தன படகு இல்லத்தில் சவாரி நிறுத்தம்

ஊட்டியில் 2–வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2018-06-09 22:45 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி–குன்னூர் சாலை வேலிவியூ பகுதி, ஊட்டி–கோத்தகிரி சாலை பேரார் பகுதி, ஊட்டி தமிழகம் சாலை ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் இரவோடு, இரவாக மரங்களை வெட்டி அகற்றினார்கள்.

இந்த நிலையில் 2–வது நாளாக நேற்று காலையில் ஊட்டி ராஜ்பவன் அருகே உள்ள ஈஸ்வரர் கோவில் மீது பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் கோவிலின் மேற்கூரை உடைந்து சேதமடைந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த கட்டிடப்பகுதியில் சேதமானது. கிளைகள் கோவில் வளாகத்தை சூழ்ந்து காணப்படுகிறது. ஊட்டி அருகே அண்ணாநகர் வெல்பெக் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வாகனத்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் அந்த வாகனம் சேதமடைந்தது.

பிங்கர்போஸ்ட் அருகே கோல்ப் கிளப் மைதான சாலையில் மின்கம்பம் மீது மரம் விழுந்தது. மேலும் பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் 4 மரங்கள் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேத்தி அருகே கெக்கராடா பகுதியில் பலத்த காற்று காரணமாக மின்மாற்றி சரிந்த நிலையில் காணப்படுகிறது. மார்லிமந்து அணைப்பகுதி மற்றும் மான் பூங்காவில் மரங்கள் வேருடன் முறிந்து கீழே விழுந்தன.

ஊட்டியில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து புதுமந்து செல்லும் சாலையில் நேற்று காலை திடீரென எதிர்பாராதவிதமாக மரம் ஒன்று முறிந்து மின் ஒயர்கள் மீது விழுந்தது. இதில் ஒரு மின்கம்பம் உடைந்து சேதமடைந்ததுடன், மற்றொரு மின்கம்பம் வளைந்தது. இதனால் மின் ஒயர்கள் தொங்கி கொண்டு இருந்தன. ஊட்டி நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தினர். ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

பலத்த காற்று காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மழையால் படகுகளில் தேங்கி நின்ற தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றினர். அதன் காரணமாக படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அங்கு மேற்கூரை உள்ள மோட்டார் படகுகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதில் சில சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். மழை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து இருந்ததை காண முடிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:–

கூடலூர்–49, குந்தா–42, கேத்தி–8, நடுவட்டம்–18, ஊட்டி–17.2, கல்லட்டி–4, கிளன்மார்கன்–6, அப்பர்பவானி–57, எமரால்டு–43, அவலாஞ்சி–150, கெத்தை–1, தேவாலா–41 என மொத்தம் 436.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. மின்வாரிய ஊழியர்கள் ஒரு பகுதியில் மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை சரிசெய்தாலும், மற்ற பகுதிகளில் மரம் விழுந்து மின்கம்பங்களில் பாதிப்பு ஏற்படுவதால் தொடர்ந்து மின் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்