சித்தூரில் 2 மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை முயற்சி

சித்தூரில் விஷம் கலந்த குளர்பானத்தை இரு மகள்களுக்குக் கொடுத்து கொன்று விட்டு, கூலித்தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவம் சித்தூரில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2018-06-09 22:00 GMT
சித்தூர்,

சித்தூர் கிரீம்பேட்டையை ஒட்டி பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதன் கரையில் பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த கூலித்தொழிலாளி சந்திரசேகர் (வயது 45) என்பவரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர்களுக்கு மகேஸ்வரி (15), சுனிதா (9) என்ற இரு மகள்கள் உண்டு. சந்திரசேகருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. அவர், தனது மனைவி இறந்ததில் இருந்து இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இரு மகள்களும், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். சந்திரசேகர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்குக் கேட்டு தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொத்தில் பங்குக் கேட்டு, பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர், பெற்றோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோர் சித்தூர் 2-டவுன் போலீசில் சந்திரசேகர் மீது புகார் செய்தனர். போலீசார், சந்திரசேகரை கைது செய்து, நேற்று முன்தினம் முழுவதும் போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்து அறிவுரை கூறி, இரவு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் குடிபோதையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கிருந்த இரு மகள்களை அழைத்துக் கொண்டு சித்தூர்-திருத்தணி சாலையில் உள்ள பங்காரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்குச் சென்றார்.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த குளிர்பானத்தில் விஷத்தை கலந்து இரு மகள்களுக்குக் கொடுத்து விட்டு, மீதி இருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை அவரும் குடித்துள்ளார். விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இரு மகள்களுக்கும், அவருக்கும் தொண்டை, வாய், வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டவே அவர்கள் கூச்சலிட்டு அலறினர்.

அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருடைய இரு மகள்களும் இறந்து விட்டதாக கூறினர். ஆபத்தான நிலையில் இருந்த சந்திரசேகருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சித்தூர் 2-டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிநாராயணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சித்தூரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்