தஞ்சையில், பலத்த காற்று வீசியது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன;போக்குவரத்து பாதிப்பு

தஞ்சையில், பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-09 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து வந்தன. ஆனால் மழை பெய்யாமல் தஞ்சை மக்களை ஏமாற்றியது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் அடிக்காமல் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மதியம் நேரத்தில் லேசான தூறல் மழை பெய்தது. இந்த மழை 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அதன்பின்னர் மழை நின்று விட்டது. பிற்பகலில் திடீரென தஞ்சையில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலைகளில் புழுதி பறந்து வாகனங் களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர்.

தஞ்சை காந்திஜி சாலை, அண்ணாசாலை பகுதிகளில் போக்குவரத்தை சீரமைப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

பலத்த காற்றினால் தஞ்சை நகரில் இருந்த மரங்கள் வேகமாக ஆடியதுடன் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தென்னை மரங்கள், பனை மரங்களில் இருந்து மட்டைகள் கீழே விழுந்தன.

தஞ்சை நீதிமன்ற சாலையில் தாசில்தார் அலுவலகம் முன்பு சாலையோரம் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது. பலத்த காற்றினால் இந்த அரச மரத்தின் பெரிய கிளையானது முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மரக்கிளையானது சாலையின் மறுபுறம் சென்ற மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்தன.

அடுத்தடுத்து இருந்த 2 மின்கம்பங்களும் வளைந்தன. மரக்கிளை முறிந்து விழுந்த நேரத்தில் நல்ல வேளையாக யாரும் அந்த வழியாக வாகனங்களில் செல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மரக்கிளை விழுந்ததால் நீதிமன்ற சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் நீதிமன்ற சாலை, ரெயிலடி, காந்திஜி சாலை, எம்.கே.மூப்பனார் சாலை மேலவெளி, நீலகிரி உள்பட பல இடங்களில் 4 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபட்டது. உடனே மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பிகள், மின் கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரக்கிளைகளை தொழிலாளர்கள் உதவியுடன் ரம்பத்தினால் அறுத்து அகற்றினர்.

தஞ்சை தாசில்தார் அலுவலக வளாகத்தில் நின்ற வேப்ப மரமும் கீழே சாய்ந்தது. தஞ்சை பெரிய கோவில் மேம்பாலம் அருகே உள்ள ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்த நிலையில் நின்றது. தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள் தூக்கி வீசப்பட்டன. 

மேலும் செய்திகள்