கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சாவு

பென்னாகரம் அருகே, கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து போனான். மேலும் 2 குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-06-09 20:14 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலேகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 36), விவசாயி. இவருக்கு லோகேஷ் (11), ராஜேஸ்வரி (5), புவனேஸ்வரி (4) என 3 குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் களியும், கோழிக்கறியும் சமைத்து அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். அன்று இரவு 7 மணியளவில் குழந்தைகள் 3 பேருக்கும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உள்ளது. மறுநாள் அதிகாலையிலும் குழந்தைகளுக்கு வாந்தியும், அதிக வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பரிதாப சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் லோகேஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனான். கோழிக்கறி விஷஉணவாக (புட்பாய்சன்) மாறியதில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகள் ராஜேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன சிறுவன் சாலேகவுண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்