தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி தம்பதி மீது போலீசார் வழக்கு

ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-06-09 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் மற்றும் சிமெண்டு வினியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 47), ஓசூர் பசுமை நகரைச் சேர்ந்த ஆதித்யா, அவரது மனைவி அகிலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை ஆதித்யா மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து இந்த நிறுவனம் செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு பங்குதாரரான வெங்கடேஷ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்தார்.

அப்போது பலருக்கு கம்பி, சிமெண்டு கொடுப்பதற்கு முன்பணமாக ரூ.5 கோடி வரை ஆதித்யா, அகிலா ஆகியோர் பெற்று மோசடி செய்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வெங்கடேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்