கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தொழிலதிபர் பலி 5 பேர் படுகாயம்

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற தொழிலதிபர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-06-10 23:00 GMT
க.பரமத்தி,

திருச்சி தில்லை நகரை சேர்ந்தவர் ராமசாமி(65), தொழில திபர். இவரது மனைவி ராமாத்தாள்(63), இவர்களது மகள் செல்வி(41), திருச்சியை சேர்ந்தவர் பாலமுத்து(வயது 51). இவர்கள் 4 பேரும் வெள்ளக்கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை பாலமுத்து ஓட்டி சென்றார். இதேபோல் திருப்பூரை சேர்ந்தவர் சீனிவாசன்(45), இவரது மனைவி உமா(40). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை சீனிவாசன் ஓட்டி சென்றார். இரண்டு காரும் தென்னிலை அருகே உள்ள தேரக்கம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு கார்களின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலதி பரான ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்த ராமாத்தாள், செல்வி, பாலமுத்து, சீனிவாசன், உமா ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கரூர்- திருப்பூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்