தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு கி.வீரமணி நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2018-06-11 22:45 GMT
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் பலர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். சிலர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று மதியம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனியசாமி, மாவட்ட தலைவர் பெரியாரடியான், மண்டல செயலாளர் பால்.ராசேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் இதுபோன்று துயர சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. இது மிகவும் கொடுமையானது. துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலர் காயம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபர்கள் பேசக்கூட பயப்படுகின்றனர்.

பணம் கொடுத்ததால் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று அரசு நினைக்கக்கூடாது. போன உயிரை மீட்க முடியாது. எந்த நோக்கத்துக்காக போராட்டத்தை நடத்தினார்களோ அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. அதில் விஷமிகள், சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறி களங்கப்படுத்தக்கூடாது. போராடியவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள்.

தமிழக அரசுக்கு அன்பான வேண்டுகோள். ஜனநாயக முறையில் மக்களை காப்பாற்றுங்கள். பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளுக்காக மக்கள் வாழ்வோடு விளையாடாதீர்கள். அமைதி திரும்பும் காலத்தில் வந்தால்தான் உண்மை தெரியவரும் என்பதற்காக இப்போது வந்து உள்ளேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட காயம் அடைந்து உள்ளனர். இது கொடுமையானது.

தமிழக அரசு இதில் அரசியல் பார்க்கக்கூடாது. மக்களை, மக்கள் உரிமைகளை மதிக்காத எந்த அரசும் தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நகரில் அமைதி திரும்பியதாக கூறினாலும் மக்கள் மனதில் அமைதி திரும்ப வேண்டும். நாளை இந்த பிரச்சினைகளுக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டிய நிலை வரும். அதனை மறந்து விடாதீர்கள்.

இதேபோல், நடிகர் மயில்சாமியும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதால் மக்கள் பயத்திலேயே இருக்கிறார்கள். மக்கள் மனதில் அமைதி திரும்ப வேண்டும். எம்.ஜி.ஆர். வழியில் வந்த அ.தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்