பனப்பாக்கம் அருகே பள்ளி வேன் மோதி 1 வயது குழந்தை பலி

பனப்பாக்கம் அருகே பள்ளி வேன் மோதி 1½ வயது குழந்தை பலியானது. போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-11 22:45 GMT
பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38), அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி பரிமளா (28). இவர்களுக்கு இரு மகன்கள் உண்டு. மூத்த மகன் அகிலேஷ் (3½), இளைய மகன் சாய்லேஷ் (1½). 8-ந்தேதி கிருஷ்ணமூர்த்தி காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் தனது மூத்த மகன் அகிலேசை எல்.கே.ஜி.யில் சேர்த்துள்ளார்.

நேற்று பள்ளிக்குச் சென்ற அகிலேஷ், மாலை 5 மணியளவில் வகுப்புகள் முடிந்து பள்ளி வேனில் வீட்டுக்கு வந்தான். பள்ளி வேன் அகிலேசின் வீட்டு முன்பு நின்றது. அதில் இருந்து இறங்கிய அவன் வீட்டுக்குள் சென்று விட்டான். வீட்டுக்கு வந்த அகிலேசை, தாயார் பரிமளா தூங்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த இளைய மகன் சாய்லேஷ் வெளியே ஓடி வந்து, பள்ளி வேனின் முன்பு நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் சாய்லேசை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர், பள்ளி வேனை எடுத்தபோது, அதில் சாய்லேஷ் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தான். அவன் அடிபட்டதை அறிந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பள்ளி வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். பரிமளா வெளியே வந்து பார்த்தபோது, மகன் சாய்லேஷ் பள்ளி வேன் மோதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், சேட்டு, சமேதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தகவலை கேட்டு பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். போலீசாருடன், பொதுமக்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், சாய்லேசின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த சர்வின்குமார் என்ற 5 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடியபோது பள்ளி வேன் மோதி இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்