இணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு

நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர் குலைத்து வருகிறது என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2018-06-12 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் இணை செயலாளர் பதவி தொடர்பாக இப்போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணை செயலாளர் பதவிக்கு வர ஐ.ஏ.எஸ். ஆக இருக்கவேண்டும், அல்லது ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு பெற்று பல ஆண்டுகள் பணிபுரிந்து பல கட்டங்களை தாண்டி இணை செயலாளராக நியமிக்கப்படுவார்கள். ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பின் இணை செயலாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள்.

ஆனால் தற்போது மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு நேரடியாக இணை செயலாளர் பதவியை நிரப்பப்போவதாக அறிவித்துள்ளது. இது பாரம்பரியத்தை அழிக்கும் செயலாகும். ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்று இருந்தாலும் பயிற்சி பெறும் காலத்தில் அவர்களது திறமையை கணித்து அதற்கும் மதிப்பெண் கொடுத்து அதன்பின் பணி உத்தரவு வழங்குவது என்று மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதைப்போலவே இணை செயலாளர் விவகாரத்திலும் மோசமான முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஒருவர் ஐ.ஏ.எஸ். ஆனபின் பல்வேறு விதிமுறைகளை கற்று கோப்புகளை தயார் செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு தயாராகிறார். அவர்கள் மத்திய, மாநில அரசில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஆனால் இப்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவு ஏற்க முடியாத ஒன்று. மத்தியில் பாரதீய ஜனதா அரசு வந்தபின் அரசின் பல்வேறு நிர்வாக அமைப்புகளை சீர்குலைத்து வருகிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை மத்திய அரசின் கைப்பாவைகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

நீதித்துறையிலும் தலையிட முயற்சித்தனர். ஆனால் நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இணை செயலாளரை நேரடியாக நியமிப்பது விதிமுறைகளை மீறிய செயலாகும். இதனை ஏற்க முடியாது. மத்திய அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் செயலை செய்து வருகிறார்கள். இணை செயலாளரை வெளியில் இருந்து நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்