பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி

பாட்டவயல் சோதனைச்சாவடியை இரவில் காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் போலீசார் பீதி அடைந்து வருகின்றனர்.

Update: 2018-06-11 23:00 GMT

பந்தலூர்,

தமிழக– கேரள எல்லையில் பாட்டவயல் பகுதி உள்ளது. மாநில எல்லை என்பதால் போலீஸ் சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதனால் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி தகர கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் போலீசார் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் சிமெண்டு கட்டிடத்தில் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனிடையே அப்பகுதியில் அடர்ந்த வனம் உள்ளதால் காட்டு யானைகள் வந்து செல்லும் இடமாகவும் விளங்குகிறது. மேலும் சோதனைச்சாவடியை காட்டு யானைகள் இரவில் அடிக்கடி முற்றுகையிட்டு வருகிறது.

இதனால் போலீசார் பீதியுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிற சமயத்தில் சோதனைச்சாவடியில் அமர்ந்துள்ள போலீசார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழலில் பணியாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:–

பாட்டவயல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியது. இதேபோல் தினமும் காட்டு யானைகள் அந்த வழியாக செல்லும் வாகனத்தை துரத்தி வருகிறது. இவ்வாறு பல்வேறு சூழலுக்கு மத்தியில் சோதனைச்சாவடியில் இரவு பகலாக போலீசார் பணியாற்றி வருகின்றனர். எனவே தகரத்தால் ஆன சோதனைச்சாவடி கூடாரத்துக்கு பதிலாக சிமெண்டு கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்