சேலம் கோட்டத்தில் ரெயில்களில் ஓசி பயணம் செய்த 4,851 பேரிடம் ரூ.20.93 லட்சம் அபராதம் வசூல்

சேலம் கோட்டத்தில் ரெயில்களில் ஓசி பயணம் செய்த 4,851 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.20 லட்சத்து 93 ஆயிரத்து 616 வசூலிக்கப்பட்டது.

Update: 2018-06-11 23:09 GMT
சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் டிக்கெட் இன்றி அதிகம் பேர் பயணம் செய்வதாக ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின், கோட்ட வணிக மேலாளர் மாது ஆகியோரது தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சேலம் ரெயில் நிலையம் உள்பட கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 4,851 பேர் சிக்கினர். அவர்கள் அனைவரும் மீதும் ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு மொத்தமாக ரூ.20 லட்சத்து 93 ஆயிரத்து 616 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும் போது, ‘ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரெயில்களில் ஓசி பயணம் செய்பவர்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதுடன் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும்‘ என்று கூறினர்.

மேலும் செய்திகள்