மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கான சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் கலெக்டரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மனு

மாணவர்களின் நலன்கருதி பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கான சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2018-06-11 23:15 GMT
திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கொடுத்த மனுவில் “நடப்பு கல்வியாண்டில் மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு அவர்களுக்கு சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று போன்றவைகளுக்கு சேவை மையங்களில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாணவர்கள் இந்த சான்றிதழ்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கலந்தாய்வுக்கு செல்லும் போது இந்த சான்றிதழ்கள் இன்றிமையாத ஒன்றாக இருக்கிறது. எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கான சான்றிதழ்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் “ திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (ஜாப் கார்டு) வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்கப்படவில்லை என்றால் ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

இதுபோல் திருப்பூர் முருகம்பாளையம் அம்மன்நகரை சேர்ந்த பாபா பக்ருதீன் கொடுத்த மனுவில் “ நான் முருகம்பாளையம் பகுதியில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கினார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனது குடும்பத்தினரை கொல்ல சதி திட்டம் நடைபெற்று வருகிறது. எனவே இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றிருந்தார். முன்னதாக பாபா பக்ருதீன் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் “திருப்பூர் மின்வாரியத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ள மின்சார கம்பம் மற்றும் கம்பிகள், இணைப்புகள் குறித்து பலமுறை புகார்கள் கொடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த அம்மாகண்ணு என்கிற மூதாட்டி கொடுத்த மனுவில் “எனது கணவர் ராஜூ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். எனது கணவர் இறந்த பிறகு நான் தனியாக வசித்து வந்தேன். தற்போது எனக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கும் செல்ல முடியவில்லை. எனது மூத்த மகள் கலாவதி தான் என்னை கவனித்து வருகிறாள். மற்ற மகன், மகள் யாரும் என்னை இங்கு வந்தோ அல்லது அவர்களது வீட்டில் வைத்தோ கவனிப்பதில்லை. இதனால் அவர்களும் என்னை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகம் எனது நிலையை புரிந்துகொண்டு உதவித்தொகையும் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்