ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள ஜமுனாமரத்தூரில் 16, 17-ந் தேதிகளில் கோடைவிழா

ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள ஜமுனாமரத்தூரில் வருகிற 16, 17-ந் தேதிகளில் நடக்கும் கோடைவிழாவில் 5 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

Update: 2018-06-11 23:00 GMT
திருவண்ணாமலை

ஜவ்வாது மலை ஒன்றியத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஜமுனாமரத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 21-வது ஆண்டு கோடைவிழா வருகிற 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜமுனாமரத்தூரில் அரசின் சார்பில் 2 நாள் கோடைவிழா வருகிற 16-ந் தேதி (சனிக் கிழமை) தொடங்குகிறது. இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை), ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை), சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (இந்து சமய அறநிலையத்துறை), துரைகண்ணு (வேளாண்மைத்துறை), வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவுக்கு அரசின் அனைத்து துறைகளின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். விழாவை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.

ஜவ்வாதுமலைக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். முறையாக மலைப்பாதை வளைவுகளில் விபத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். விழா நடைபெறும் நாட்களில் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு தகுந்த படி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

தேவையான இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பது அவசியம். மேலும் அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டுகள், ஏரியில் நடைபெறும் படகு போட்டி, உணவு வகைகள், மலையில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய உள்ளூர் சந்தை போன்றவற்றை முறையாக நடத்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கண்காணிக்க வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்