பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட உயர்கல்வி, சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது

உயர்கல்வி, சுகாதாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

Update: 2018-06-12 23:00 GMT

கிருஷ்ணகிரி,

உயர்கல்வி, சுகாதாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

இன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்தில் 7-வது இடங்களுக்கு மேல் உள்ளது. இதனை அவர் மறந்து விட்டு பேசுகிறார். இதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் மாணவர்கள், உயர்கல்வியில் தமிழகத்தில் தான் சேருகிறார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு 1-வது வார்டு வட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன், தொகுதி செயலாளர் காத்தவராயன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோக்குமார் எம்.பி. சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்