தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்பு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை

தனியார் நிறுவன ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-06-12 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமம் அய்யாசாமி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 33). இவர் திருவள்ளூரை அடுத்த மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி (28) என்ற மனைவியும், சுபிதா (5) என்ற மகளும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 24–ந்தேதி வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற குணசேகரன் வீடு திரும்பவில்லை. அவரது வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் 26–ந்தேதியன்று கொப்பூர் ஏரிப்பகுதியில் உள்ள மாந்தோப்பு அருகே குணசேகரன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அருகில் அவரது மோட்டார் சைக்கிள் இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் லட்சுமி தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தன்னுடைய கணவர் சாவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். புகார் அளித்து இது நாள்வரையிலும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குணசேகரனின் உறவினர்கள் மற்றும் கொப்பூர் பகுதி பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு குணசேகரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ அடித்து கொலை செய்து உள்ளதாகவும் கூறி அவரது சாவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் இது தொடர்பான புகார் மனுவை கொப்பூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்