நிதி ஆயோக்குடன் இணைந்து செயல்பட வேண்டும், புதுச்சேரி அரசுக்கு கடிதம்

நிதி ஆயோக்குடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று புதுவை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2018-06-13 23:30 GMT

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்ட் அனுப்பியுள்ள கடிதத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

கூட்டாட்சியை பின்பற்றி வரும் நிதி ஆயோக் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த குறியீடுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் முற்போக்கான இந்தியாவிற்கு ஆரோக்கியமான மாநிலங்கள் என்ற தலைப்பில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

அடுத்ததாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறமையான நீர் மேலாண்மையை கொண்டுவரும் நோக்கில் கலப்புநீர் மேலாண்மை குறியீடு தயாரித்துள்ளோம். இதில் பங்கேற்க நிதி ஆயோக் பல தகவல்களை கேட்டு கடிதங்களை புதுச்சேரி அரசுக்கு அனுப்பியது.

மேலும் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்கள் மூலமும் தொடர்பு கொண்டது. ஆனாலும் தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் அந்த அறிக்கையில் புதுச்சேரி விடுபட்டுவிட்டது. இந்த ஆண்டு முதல் நிதி ஆயோக்குடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிததத்தை வெளியிட்டு கவர்னர் கிரண்பெடி, நீர் வளத்தை அதிகப்படுத்த அனைவருக்கும் பங்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதை செய்யாமல் நீரை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடக்கூடாது. நீர் வளத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வார இறுதிநாட்களில் புதுச்சேரியில் உள்ள தொழிற்பேட்டைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வேளாண்மை மற்றும் தொழில்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வில் நீர் ஆதாரம் எப்படி பயன்படுகிறது? விற்கப்படுகிறதா? சேமிக்கப்படுகிறதா? மறு சுழற்சி செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியிடமிருந்து வந்துள்ள கடிதத்தில், முதல்–அமைச்சர் நாராயணசாமி, முதல்–அமைச்சர் அலுவலகம், எண்.9, விநாயகர் கோவில் தெரு, திலாசுப்பேட்டை என்று உள்ளது. ஆனால் இது முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு முகவரி ஆகும்.

மத்திய அரசிடமிருந்து வரும் பல்வேறு கடிதங்கள் இதுபோன்ற முகவரியோடுதான் இன்றளவும் வருகிறது. முதல்–அமைச்சரின் அலுவலகம் சட்டமன்ற வளாகத்தில்தான் உள்ளது. முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீடு எல்லையம்மன்கோவில் வீதியில் உள்ளது. முதல்–அமைச்சரின் முகவரி கூட தெரியாமல் மத்திய அரசு கடிதம் அனுப்புவதாக அரசு வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்