மாம்பழ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு - பொதுமக்கள் புகார்

பழனி அருகே மேற்கு ஆயக்குடியில் மாம்பழ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Update: 2018-06-13 23:15 GMT
பழனி,

பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள மாம்பழ குடோன்களில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயக்குடிக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் சுமார் 5 டன் எடை கொண்ட மாம்பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவற்றை ஆயக்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். மேலும் ஆயக்குடி பகுதியில் மாம்பழ குடோன் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கினர். இந்த நிலையில் மேற்கு ஆயக்குடி 16-வது வார்டு பகுதியில் தற்போது மாம்பழ கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

குடோன்களில் தேங்கும் மாம்பழ கழிவுகள் அனைத்தும் எங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் தான் கொட்டப்படுகின்றன. அவற்றில் சில ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட அழுகிய பழங்களாக இருக்கின்றன. அந்த பழங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த பழங்களில் புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மாம்பழ கழிவுகளை குப்பைகளோடு கொட்டப்படுவதை தடுப்பதுடன், அவற்றை மண்ணில் புதைத்து அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்