நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-13 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், லட்சுமிநாராயணன், காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்