ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது

Update: 2018-06-13 23:00 GMT
வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த 2 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் 2 பேரும் ராணுவத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் கூறினர். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன்.

பின்னர் இதுகுறித்து எனது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்தேன். அதன்பேரில் 9 பேர் ராணுவத்தில் வேலை வாங்கி தரக்கோரி ரூ.27 லட்சத்து 25 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தனர். ஆனால் அவர்கள் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் கடத்தியும், நாங்கள் கொடுத்த ரூ.30 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் கொடுத்த ரூ.30 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்