பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவே மணியரசன் மீது தாக்குதல்

பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவே மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தஞ்சையில் சீமான் கூறினார்.

Update: 2018-06-14 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் கடந்த 10–ந் தேதி இரவு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவருமான மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயம் அடைந்த அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மணியரசனை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தன்னலமில்லாமல் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழிப்பறிக்காக என கூறுகிறார்கள். அவரிடம் பணம் இருக்காது என்று தஞ்சை பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். பிறகு எப்படி வழிப்பறிக்காக நடந்தது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.


இந்த தாக்குதலை ஏன் நடத்தினார்கள்? எதற்காக நடத்தினார்கள் என்ற கோணத்தில் விசாரணை கொண்டு செல்லப்படவில்லை. பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கூட பயணிப்பவர்களுக்கும் இது அச்சத்தை ஏற்படுத்தும். போராடும் சிந்தனை வரக்கூடாது என அரசு நினைக்கிறது.

காவிரி பிரச்சினை தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்தி ஆணையம் அமைத்தும் இன்னும் கெஞ்சுகிறார்கள். அழுத்தம் கொடுப்பது இல்லை. சென்னை–சேலம் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியது நான் தான். நாங்கள் கேட்பது தண்ணீர். ஆனால் அவர்கள் தார்ச்சாலை கொடுக்கிறார்கள். சாலை போட்டால் வளர்ச்சி என்கிறார்கள். அது கவர்ச்சி வார்த்தை.


நிலத்தை பறித்து, மண்ணை அழித்து சாலை அமைத்து என்ன பயன்?. யாருக்காக அந்த சாலை போடப்படுகிறது?. தொழில் வளம் என்கிறார்கள். பலநூறு ஆண்டுகாலம் போராடி காட்டை விளைநிலமாக மாற்றி உள்ளனர். தற்போது அதனை அழித்து தொழிற்சாலை அமைத்தால் பருப்பு, விளை பொருட்களை உருவாக்க முடியுமா? துறைமுகம் என்கிறார்கள். அது எதற்கு?.

இங்குள்ள வளத்தை ஏற்றுமதி செய்து விட்டு அரிசி, பருப்பு, வெங்காயம் இறக்குமதி செய்வதால் என்ன பயன்?. இதை பேசினால் சமூக விரோதி, தேசத்துரோகி என்கிறார்கள். தஞ்சை பெரியகோவிலில் இருந்து திருட்டு போன ராஜராஜசோழன் சிலையை மீட்டுக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இதை கடத்தியது யார்? எப்போது திருட்டு போனது, இதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்