ரவுடியின் அண்ணனை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது

புளியந்தோப்பில் ரவுடியின் அண்ணனை கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களின் கூட்டாளிகள் 7 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2018-06-14 22:45 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாரி(வயது 52). இவர், புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன் ஆவார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியை கொலை செய்ய 9 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர். ஆனால் அந்த பகுதி பொதுமக்கள் விரட்டி அடித்ததால் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றி மாரி அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு சுந்தரபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த இளவரசன்(33) மற்றும் கன்னிகாபுரம் தாஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ்(21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

சிறையில் உள்ள பாம் சரவணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நேற்று முன்தினம் அவரை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது தம்பியை பார்க்க கோர்ட்டுக்கு வரும் மாரியை கொலை செய்ய இவர்கள் திட்டம் போட்டு உள்ளனர்.

ஆனால் மாரி வராததால் அவரது வீட்டுக்கே சென்று அவரை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்ததால், கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கைதான 2 பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 2 பேரிடம் இருந்து 2 அரிவாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய இவர்களின் கூட்டாளிகளான மகேஷ், அவினாஷ், மகா, ஸ்டீபன், அம்பேத், ஜெயசீலன் மற்றும் மதன் ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா, எண்ணூர் ராஜா உள்ளிட்ட முக்கிய ரவுடிகள் கை காட்டும் நபர்களை கொலை செய்யும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மாரியின் அண்ணன் தென் என்ற தென்னரசு, ஏற்கனவே ஆற்காடு சுரேசால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்