8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: நிலம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நிலம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் பசுமைச்சாலை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-26 23:15 GMT
திருவண்ணாமலை,

சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமைச்சாலை அமைய உள்ள பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட நார்த்தாம்பூண்டி, பெரிய கிலாம்பாடி, சின்ன கிலாம்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, ஆழத்தூர், பத்தியவாடி, பாடகம், காம்பட்டு, அணியழக்காம்பட்டு, தென்பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலம், வீடுகளில் கருப்பு கொடி கட்டி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டனர்.

பெரியகிலாம்பாடி கிராமத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சில இடங்களில் போலீசார் கருப்பு கொடியை அகற்றினர்.

செங்கத்தை அடுத்த முறையாறு, செ.நாச்சிப்பட்டு பகுதியிலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை, கட்டமடவு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முறையாறு பகுதியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் விவசாய நிலங்களில் கருப்பு கொடி ஏற்றியும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபுவை கைது செய்து, புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலக பகுதியில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும் பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அபிராமன், வீரபத்திரன், சிவாகுமார், செல்வி, ராமதாஸ் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்வது சட்டப்படி குற்றம், மீறு பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் இருந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணைக்காக திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களில் 3 பேர் பிறமொழி பத்திரிகையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விடுவித்தனர். மற்ற 2 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களையும் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்