8 வழி பசுமைச்சாலை எதிராக மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டியவர் கைது

8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக முகநூல் மூலம் மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டிய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-04 23:45 GMT
திருவண்ணாமலை,

சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விவசாயிகள் சிலர் கிணற்றில் குதித்தும் தீக்குளிக்க முயன்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பசுமைச்சாலைக்கு எதிராக தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களை போலீசார் கண்காணித்து போராட்டத்துக்கு தூண்டுபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த 4 தினங்களுக்கு முன்பு இவ்வாறு போராட்டத்துக்கு தூண்டிய திருவண்ணாமலை பேகோபுர தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 35), வேளுகானந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25), பவன்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வாணாபுரம் நெய்யூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கதிரவன் (25) என்பவர் பசுமைச்சாலை திட்டத்தை எதிர்க்கும் நோக்கோடும், போராட்டம் செய்ய மாணவர்களை தூண்டும் நோக்கத்தோடும் முகநூலில் ‘மீம்ஸ்’ உருவாக்கிபரப்பியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், “கதிரவன் பொக்லைன் எந்திரம் ஓட்டி வருகிறார். இவர் முகநூலில் பசுமைச்சாலை குறித்து ‘மீம்ஸ்’ உருவாக்கி அந்த திட்டத்திற்கு எதிராக போராட மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில், ஒரு தேதியை குறிப்பிட்டு தனியார் மற்றும் திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வாருங்கள் என்று பரப்பி உள்ளார். எனவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று போராட்டத்துக்கு தூண்டுபவர்கள் கைது செய்யப்படுவர்” என்றனர்.

மேலும் செய்திகள்