திருச்சி மாநகராட்சியில் தொழில் வரி 30 சதவீதம் உயர்வு அதிகபட்சமாக ரூ.1,250 நிர்ணயம்

திருச்சி மாநகராட்சியில் தொழில் வரி 30 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ரூ.1,250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-06 23:00 GMT

திருச்சி,

உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி ஆதாரமாக சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் மற்றும் வடிகால் வரி, சேவை கட்டணங்கள், விற்பனை மற்றும் வாடகை கட்டணங்கள் உள்ளன.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நிதி ஆதாரங்களை பெருக்கும் வகையில் தற்போது தொழில் வரியை நிர்ணயித்து அறிவித்துள்ளது. இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தொகையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை திருத்தியமைத்து தொழில் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி சராசரி அரையாண்டு வருமானத்தில் ரூ.21 ஆயிரம் வரை தொழில் வரி இல்லை.

ரூ.21 ஆயிரத்து 1 முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.169-ம், ரூ.30 ஆயிரத்து 1 முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.429-ம், ரூ.45 ஆயிரத்து1 முதல் ரூ.60 ஆயிரம் வரை ரூ.858-ம், ரூ.60 ஆயிரத்து 1 முதலும், அதற்கும் மேலும் வரை ரூ.1,250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள், தொழில்புரிவோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபார தொழில் நிறுவனங்களிடம் இந்த புதிய தொகையில் தொழில் வரி வசூலிக்கப்படும்.

தொழில் வரி நிர்ணயம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது “ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் தொழில் வரி நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தப்படும். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு 30 சதவீதம் தான் உயர்த்தப்பட்டது. அதேபோல தான் இந்த ஆண்டும் 30 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1,250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றனர். இதற்கு முன்பு செலுத்திய தொகையில் இருந்து கூடுதலாக 30 சதவீதம் தொழில் வரி செலுத்த வேண்டி உள்ளதால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என வரி செலுத்துவோர் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்