கைலாய புனித பயணத்தின் போது நிலச்சரிவு: ‘ஒரு லிட்டர் குடிநீர் ரூ.150-க்கு வாங்கி குடித்தோம்’ நேபாளத்தில் இருந்து திரும்பிய மேட்டூர் தம்பதி பேட்டி

கைலாய புனித பயணத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு லிட்டர் குடிநீரை ரூ.150-க்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலை உருவானது என நேபாளத்தில் இருந்து திரும்பிய மேட்டூர் தம்பதி கூறினர்.

Update: 2018-07-06 22:45 GMT

மேட்டூர்,

மேட்டூரை சேர்ந்தவர் சேகர். மளிகை கடை உரிமையாளர். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சுற்றுலா குழுவுடன் சேகர் தனது மனைவி கீதாவுடன், திபெத்திய பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித பயணம் சென்றார். அப்போது நேபாள நாட்டின் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

சேகர்-கீதா தம்பதியினர் நேபாளத்தில் சிமிகோட் என்ற இடத்தில் சென்ற போது கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு கைலாய புனித பயணம் சென்ற அவர்கள் சிக்கி தவித்தனர். அங்கு மீட்பு குழுவும் செல்ல முடியவில்லை என தெரிகிறது. இதனிடையே மழை பாதிப்பு குறைந்தவுடன் கடந்த 5-ந் தேதி மதியம் ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட்டில் இருந்து நேபால்கஞ்சி சென்றனர். அங்கிருந்து கார் மூலம் லக்னோ வந்து, விமானத்தில் சென்னை வந்தனர். பின்னர் பஸ் மூலம் மேட்டூர் வந்து சேர்ந்தனர்.


இது குறித்து தகவல் அறிந்ததும் தமிழக அரசு சார்பில் மேட்டூர் தாசில்தார் அறிவுடைநம்பி, அவர்களது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். தாசில்தாருடன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி ஆகியோர் சென்றனர். கைலாய புனித பயணம் செய்த மேட்டூர் தம்பதி சேகர்-கீதா ஆகியோர் கூறியதாவது:-

கடந்த மாதம் 22-ந் தேதி மேட்டூரில் இருந்து கைலாஷ் மானசரோவருக்கு புனித பயணம் மேற்கொண்டோம். நேபாளத்தில் சிமிகோட் என்ற மலைப்பிரதேசத்துக்கு சென்ற போது, கடும் பனி மற்றும் மழை பெய்தது. இதனால் விமான சேவை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் வெப்பநிலை ‘0‘ டிகிரிக்கும் குறைவாக சென்றது. இதன் காரணமாக வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மிகவும் சிரமப் பட்டனர்.

நாங்கள் திட்டமிட்டு சென்றதை விட காலதாமதம் ஏற்பட்டதால், எங்களது குழுவில் வந்த பலரும் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சிரமப்பட்டனர். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.150-க்கும், ஒரு டீ ரூ.60-க்கும் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சுற்றுலா சென்ற நிறுவனம் சார்பில் விமானம் வரவில் லை. எனினும் அதிக கட்டணம் கொடுத்து ஹெலிகாப்டர் மூலம் நேபால்கஞ்சி சென்று, அங்கிருந்து கார் மூலம் லக்னோ வந்தோம். இந்த பயணம் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் நண்பர்கள், உறவினர்கள் பிரார்த்தனையால் நல்லமுறையில் வீடு திரும்பினோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்