புதுக்கடை அருகே ஆற்றில் மணல் கடத்திய டெம்போ பறிமுதல்; 2 பேர் கைது

புதுக்கடை அருகே ஆற்றில் மணல் கடத்திய டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டெம்போ டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-07-06 21:58 GMT
புதுக்கடை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


புதுக்கடை அருகே அஞ்சாலிகடவு பகுதியில் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜன் மற்றும் போலீசார் அஞ்சாலிகடவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக ஒரு டெம்போ வேகமாக வந்தது. போலீசார் அதை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

ஆனால், டிரைவர் டெம்போவை நிறுத்தாமல், போலீசார் மீது மோதுவது போல் வந்தார். உடனே, சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜனும், அவருடன் இருந்த போலீசாரும் விலகி கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போ வேகமாக தப்பி சென்றது.

உடனே, போலீசார் ஜீப்பில், டெம்போவை சிறிது தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து டெம்போவை சோதனையிட்ட போது, ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மணலுடன் டெம்போவை பறிமுதல் செய்தனர். மேலும், அதில் இருந்த டிரைவர் சேவியர் இக்னேசியஸ், உரிமையாளர் மகேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்