கோவையில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவையில் ரூ.50 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-06 23:18 GMT
கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பசெட்டி வீதியை சேர்ந்தவர் விஷ்ணுராஜ் (வயது 40). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் மொத்த பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி அதிகாலையில் மொபட்டில் பூ மார்க்கெட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், விஷ்ணுராஜை கடத்தியது.

பின்னர் அவர்கள் விஷ்ணுராஜின் தந்தை கோவிந்தராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினார்கள். இந்த நிலையில் விஷ்ணுராஜை கடத்திய கும்பல், அவரை காரில் திருச்சிக்கு கொண்டு சென்று ரூ.1½ லட்சத்தை பறித்தனர். பின்னர் அவரை திருச்சி-மதுரை ரோட்டில் கீழே தள்ளிவிட்டு சென் றனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் சந்தோஷ், தினகரன் ஆகியோர் தங்கள் நண்பர்க ளுடன் சேர்ந்து விஷ்ணுராஜை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ், தினகரன், கல்லூரி மாணவர் ஹரிபிரசாத், சதாம் உசேன், அரவிந்த், நாகராஜ் ஆகிய 6 பேரை கைது செய் தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மதுரையை சேர்ந்த சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த கடத்தல் வழக்கில் சந்தோசின் சகோதரரும், பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வரும் பிரபுக்கு (28) தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து போலீசார் பிரபுவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சதீஷ் உள்பட 5 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது., ‘மதுரையை சேர்ந்த சதீசுக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து விட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும். தற்போது அவர் மதுரையில் தான் பதுங்கி உள்ளார். அதை அவருடைய செல்போன் சிக்னல் மூலம் கண்டு பிடித்து உள்ளோம். எனவே விரைவில் அவரை பிடித்து விடுவோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்