வேலூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-06 23:58 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்துகிற நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. அதுபோல கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தில் ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்கப்பட வேண்டும். அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய் 100 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

கடைகளில் எடையாளர்களை நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி, மகளிர் நலன், ஊழியர் நலன் கவனத்தில் கொண்டு கடைகளுக்கு உரிய வசதிகள் செய்வதுடன், கழிவறை அமைப்பை உருவாக்க வேண்டும்.

எடைகுறைவு இல்லாமல் பொருட்களை பொட்டலமுறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்